-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

பள்ளிகளை திறக்க அவசரம் ஏன்? What's the Urgency for School Opening in this Corona Period?

கல்வி என்பது மனப்பாடம் செய்து பேப்பரில் வாந்தி எடுப்பதற்கா? அல்லது ஒருவரின்
அறிவை, திறமையை வளர்பதற்கா?

இந்த வருடத்தில் மாணவர்கள் என்ன விஷங்களை கற்றுக் கொண்டார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு தேர்வா? அல்லது பலரையும் வடிகட்டி பெயில் செய்வதற்கு தேர்வா?

எதிர்காலம் வீணாய் போகும் என்று கூறுகிறீர்களே படித்தவர்கள் மட்டும்தான் முன்னேறுகிறார்கள் என்றால் நாட்டில் முக்கால்வாசி பணக்காரர்கள் படிக்காதவர்கள்தானே . அதற்க்காக படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. அது அறிவை வளர்க்கவே உதவும். இந்த கொரோனா போரில் நாடு உள்ள சமயத்தில்கூட அவர்களுக்கு பள்ளிக்கூடம் வைத்தே தீருவோம் என்பது என்ன மாதிரியான சிந்தனை. இந்த ஒரு வருடத்தில் அவர்கள் அனைவரையும் பாஸ் செய்து விட்டால்... என்ன குடியா மூழ்கிப் போய்விடப் போகிறது?

காமராஜர் தன்னுடைய திறமையால் நாட்டையே ஆளவில்லையா? அவருடைய ஆட்ச்சியை யாராவது குறை சொல்ல முடியுமா?

பட்டம் படித்தவர்களே நாட்டை ஆண்டாளும் அதில் எத்தனை ஓட்டைகள்... எத்தனை உடைசல்கள்? ஒவ்வொரு ஆட்ச்சியும் வரும்போது அட இவர்கள் வந்து விட்டார்கள் விடிவு வரும் அடடா இப்போது இவர்கள் வந்து விட்டார்கள் இப்போதாவது விடிவு பிறக்குமா என்று இருக்கும் மக்களை காசுக்கு கையேந்த விட்டதும் இலவசங்களுக்கு வரிசையில் காக்க வைத்ததையும் ஒன்று இரண்டு மாதங்களில் அதை காயலான் கடையில் போட்டு காசு பெற வைத்ததையும் தவிர வேறு என்ன செய்து விட்டார்கள் இவர்களெல்லாம்?


எத்தனை மாணவர்களின் கனவுகள் சிதைக்கப் பட்டிருக்கின்றன இதுநாள் வரை ... எத்தனை மாணவர்களின் வேலைகள் பறி போயிருக்கின்றன? எத்தனை மாணவர்களின் சான்றிதழ்கள் பெட்டிகளிலும் பீரோக்களிலும் வெற்றுக் காகிதங்களாக கிடக்கின்றன?

இதுநாள் வரை கண்டுகொள்ளப் படாத மாணவர்கள், இளைய தலைமுறை எதற்க்காக மையப்படுத்தப் படுகிறது? கொரோனா வருமா வராதா என்று பட்டி மண்டபமெல்லாம் நடத்த முடியுமா இல்லை அதனுடன் பேச்சு வார்த்தைதான் நடத்த முடியுமா?


காசு வைத்திருப்பவன் பள்ளிக்கு செல்லாமல் ஆன் லைனில் படிப்பான் கொரோனா வந்தாலும் லட்சக் கணக்கில் செலவு செய்து தனியார் ஆஸ்பத்திரியில் படுத்திருப்பான்... பணமில்லாத அன்றாடம் காய்சிகளும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத்தான் கிள்ளு கீரைகளா? இல்லை சோதனை எலிகளா? வருமா வராதா என்று பள்ளிக்கு போய் சோதித்து பார்க்க?

கொரோனவால் ஒரு மாணவரின் உயிர் போனாலும் யார் அதற்க்கு பொறுப்பு ஏற்பார்கள். அப்படியே பொறுப்பு ஏற்றாலும் அவர்களால் அந்த மாணவரை உயிரோடு திருப்பி தர முடியுமா? 

தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள் மொத்தம் எத்தனை பேர்? அந்த மொத்த பெற்றோர்களில் எத்தனை சதவீதம் பேர் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்த கொண்டார்கள்?

2000 பேர் படிக்கும் பள்ளிகளில் கூட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மிக மிக சொற்பமே!

ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படிக்குமிடங்களில் 10 முதல் 50 பேர் வரை கலந்து கொண்டு 70 % என்று ஒருவர் 90 % என்று ஒருவர் 95 % என்றெல்லாம் கூறுவது என்ன நியாயம்?

நாட்டில் விவசாயிகள் போராட்டம், வேலையின்மை, தொழில் முடக்கம் என்றெல்லாம் பல பிரட்சனைகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு மீடியாவையும், மக்களையும் திசை திருப்ப பள்ளி மாணவர்களின் உயிரோடு விளையாடலாமா?

இத்தனை நாள் கொரோனா இருக்கிறது என்கிறீர்களே இப்போது கொரோனா ஊருக்கு போயிருக்கிறதா? அல்லது லீவ் போட்டிருக்கிறதா?

அப்போது ஒட்டிய கொரோனா இப்போது ஒட்டாது என்று அறிவித்து விட்டதா?

அல்லது தடுப்பூசிதான் அனைவருக்கும் போட்டு விட்டீர்களா ?

எதை நம்பி பிள்ளைகளை அனுப்புவது பள்ளிக்கு கூடத்திற்க்கு?

இப்படியெல்லாம் கொரோனா இருக்கிறது வீட்டிற்க்குள்ளேயே இருங்கள் என்பதும் அட அது பாட்டுக்கு கொரோனா ஒரு பக்கம் இருக்கட்டும் நீங்கள் ஒரு பக்கம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்றும் மாற்றி மாற்றி கூறினால் அரசின் எச்சரிக்கைகளை எதிர்காலத்தில் மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்?

பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதற்க்கும் அறிவை வளர்பதற்க்கும் தானேயன்றி கொரோனவை ஒட்டிக் கொண்டு வருவதற்க்கு அல்ல.

கொரோனா ஒட்டிக் கொள்ளுமோ உயிர் போய்விடுமோ என்று பயத்துடனே மாணவர்களை திரியவிடுவதுதான் அழகா! எப்படிங்க படிப்பு வரும் ?

பள்ளிக்கூடம் போன பையன் பத்திரமா வருவானா இல்ல கொரோனவோடு வருவானோ தெரியலையே என்று தாய்மார்களை கலங்க விடலாமா?

பெற்றவர்களுக்கு குழந்தைகள் அவர்களின் எதிர்காலம்... அவர்களின் கனவு... அதை கலைப்பதற்க்கு ஒரு கொரோனா என்ற காலன்(எமன்) காத்திருக்கிறான் என்றால்... எந்த அக்கறையுள்ள பெற்றோர்தான் எங்கள் குழந்தைகளின் உயிரே போகும் வாய்ப்பிருந்தாலும் பரவாயில்லை பள்ளிக்கூடம் அனுப்புவோம்  என்று நினைப்பார்கள்?

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் குழந்தைகள் உயிரோடு இருந்தால்தான் அவர்களின் எதிர்காலத்தை உருவாக்க முடியும். உயிர் முக்கியமா? கல்வி முக்கியமா? இந்த வருடம் இல்லையென்றால் அடுத்த வருடம்? மாணவர்கள் அனைவரையும் பாஸ் செய்ய வைத்து பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் மனதில் பாலை ஊற்றுவதர்கு பதில் கொரோனா ஒழிக்கப் படாமலேயே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வையுங்கள் என்ற விஷயம் பாசனம் போன்ற கசப்பாகவல்லவா இருக்கிறது?

லாக் டௌனால் பாதிக்கப்பட்டு பலகோடிப் பேர் வேலையின்றி இருக்கும் சமயத்தில் ஆன்லைன் பள்ளி என்று சொல்லி இப்பதான் பலபேர் கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளுக்கு செல்போனும், கம்ப்யூட்டரும் வாங்கி கொடுத்திருக்கும்போது அந்த கடன் தவனையே பலபேர் கட்டி முடிக்காமலிருக்கும்போது 4 மாதங்களே மீதமிருக்கும் சூழலில் வேன் பீஸ், யூனிபார்ம், பேக், நோட்ஸ், நோட்டு, ரெக்கார்டு நோட்டு என்றெல்லாம் பெற்றோர்களுக்கு செலவு வைக்கலாமா?

அப்படியே செலவு செய்து வாங்கி கொடுத்தாலும் ஒரு வருட பாடத்தை, நோட்டை , ரெக்கார்டை குறுகிய காலத்தில் எழுத சொல்லி பள்ளிகள் வற்புறுத்தினால் மாணவர்கள் மனோநிலை பாதிக்கப் படாதா? பாடத்தை படித்து பரீட்சசை எழுதுவர்களா? இல்லை இதையெல்லாம் எழுதிக் கொண்டிருப்பார்களா?
பெற்றோர்களின் கருத்தை கேட்டீர்களே மாணவர்கள் கருத்தை, மன நிலையினை அறிந்திருக்க வேண்டாமா?

ஒரு மதிப்பெண் கேள்விகள் (Objective Type) பாடத்திலிருந்து 40 மதிப்பெண்களுக்கு, பாட சம்மந்தமான பிராஜெக்ட்டிர்கு 30 மதிப்பெண்கள், புதிய கண்டறிதலுக்கு 10 மதிப்பெண்கள், தொழில் நுட்ப அறிவிற்க்கு 10 மதிப்பெண்கள் பொது அறிவிற்க்கும் வருகை பதிவிறகும் சேர்த்து 10 மதிப்பெண்கள் என்று இந்த வருடம் எளிமையாக தேர்வுகளை நடத்தி எதிர்கால கல்விக்கும் நாட்டிற்க்கும் முன்னுதாரணமாக இருக்கலாமே!

பல மாநிலங்களில் ஆசிரியர்கள் சூப்பர் ஸ்பிரேடேர் என்றழைக்கப் படும் மாணவர்கள் மூலம் பாதிக்கப் பட்ட முன்னுதாரணங்கள் இருக்கும்போது அப்படி என்ன அவசியம் வந்தது பள்ளிகளை திறக்க?

வீட்டிலுள்ள வயதானவர்களின் பாதுகாப்புமல்லவா கேள்விக் குறியாக்கப்படுகிறது?
அன்புள்ள பெற்றோர்களே! உங்களின் குழந்தைகளின் பாதுகாப்பு உங்களின் கைகளில் வழங்கப் பட்டிருக்கிறது. அந்த பாதுகாப்பு அரணை உடைக்க உங்களிடமே கடிதம் பெற்றுக்கொள்ளப் பார்க்கிறார்கள். எதற்க்காக அந்த கடிதம் என்று கேள்வி கேளுங்கள். இதனை நாட்களாய் ஒப்புதல் கடிதம் பெற்றுத்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினோமா? இப்போது மட்டும் கடிதம் கேட்கிறார்கள் எதற்காக? யாரை பாதுகாக்க? யாரெல்லாம் பிரட்சனை வந்தால் தப்பிக்க இந்த கடிதம்?

பெற்றோர்களே விழித்திருங்கள் ! உங்கள் அருமை செல்வங்களை காத்திருங்கள்! நான் கேட்ட கேள்விகள் உங்கள் மனதிலும் இருந்தால் பெற்றோர்களே! அருமை நண்பர்களே! எதிர்காலத்தை கட்டியெழுப்பப்போகும் இந்திய நாட்டின் சிற்பிகளாம் மாணவ செல்வங்களே இதனை பகிர்ந்திடுங்கள் அனைவருக்கும். .. தனித்திருப்போம்! விழித்திருப்போம்!! விலகியிருப்போம்!!! வீட்டிலிருப்போம் !!!

- ஜெயசெல்வன்
E mail: jayaselvancool@gmail.com
FB Page Link: https://www.facebook.com/NDPMI
Youtube: https://www.youtube.com/channel/UCAysFEBTJvvwnvFXunOHdZg/videos





0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?