குடும்பத்தில் ஆண் ஃபிட்டாக இருந்தால் தான் அக்குடும்பத்தை நன்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் வீட்டுத் தலைவரே வலிமையின்றி, எப்போதும் உடலில் ஏதேனும் பிரச்சனையுடன் இருந்தால், அக்குடும்பம் நன்றாகவா இருக்கும்? நிச்சயம் இல்லை. எனவே ஆண்கள் தங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அதற்கு 24 மணிநேரமும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்பதில்லை. அன்றாடம் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவதோடு, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்!!! இங்கு ஃபிட்டாக இருப்பதற்கு ஆண்கள் தினமும் பின்பற்ற வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவது
இரவில் நீண்ட நேரம் டிவி, மொபைல் அல்லது லேப்டாப் என்று பயன்படுத்தாமல், சீக்கிரம் தூங்கச் செல்ல வேண்டும். இப்பழக்கத்தை தினமும் ஆண்கள் மேற்கொண்டு வந்தாலேயே போதும் பல உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஆண்களிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கமே, தினமும் போதிய அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாதது தான். எனவே இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் வேகமாக எழும் பழக்கத்தைக் கொள்வது பல நன்மைகளை ஆண்களுக்கு வழங்கும்.
ஆரோக்கியமான உணவு
ஜங்க் உணவுகள் அல்லது ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். குறிப்பாக சுவைக்காக சாப்பிடாமல், ஆரோக்கியத்திற்காக சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். அதற்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
நீரை அதிகம் பருகவும்
குடிக்கும் நீரின் அளவு மிகவும் முக்கியமானது. ஆண்கள் இதில் மிகவும் மோசம். சில ஆண்கள் ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் நீரைக் கூட குடிப்பதில்லை. இப்படி குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு பாதிக்கப்படுவதோடு, உடலில் நச்சுக்களின் அளவும் அதிகரிக்கும். ஆகவே தினமும் தவறாமல் 2-3 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டியது அவசியம்.
பரிசோதனை
அக்காலத்தில் பரிசோதனை தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் நோய்கள் ஏராளமாக உள்ள இன்றைய காலத்தில் வருடத்திற்கு ஒருமுறையாவது உடலை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஆண்கள் இச்செயலைத் தவறாமல் செய்ய வேண்டும். இதன் மூலம் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.
உடற்பயிற்சி
இன்றைய காலத்தில் உடல் உழைப்பு என்பதே இல்லை. உடலுக்கு உழைப்பு இருந்தால் தானே கொழுப்புக்கள் கரையும். அது கரையாமல் இருந்தால், உடல் பருமன் அதிகரித்து அதனாலேயே பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே தினமும் குறைந்தது 1/2 மணிநேரமாவது ஆண்கள் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
உண்ணும் நேரம்
பல ஆண்கள் சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்வதில்லை. இப்படி சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளாமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல் போவதோடு, அல்சர் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளும் பழக்கத்தை ஒவ்வொரு ஆணும் பின்பற்ற வேண்டும்.