விடுதலைப் புலிகளுக்கு எதிரான, இறுதிக்கட்டப் போரில் நடந்த, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கை அரசுக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடி வலுத்துள்ளது. இந்த விவகாரத்தில், சீனாவின் உதவியை நாடி,
இலங்கை அதிபர் ராஜபக்ஷே, நேற்று சீனத் தலைநகர் பீஜிங் சென்றார். முன்னதாக, கொழும்புவில் நிருபர்களைச் சந்தித்த ராஜபக்ஷே, "பொருளாதார கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, சீனா செல்கிறேன்' என்றார்.
சீனாவில் உள்ள ஷென்ஜென்னில் நடக்கும், விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட பின், அதிபர் ஹூ ஜிண்டாவோ மற்றும் பிரதமர் வென் ஜியாபோ இருவரையும், ராஜபக்ஷே சந்தித்துப் பேசுகிறார்.
அதிபர் ராஜபக்ஷேவின் சீனப் பயணம் குறித்து, கொழும்பைச் சேர்ந்த அரசியல் நிபுணர் ஒருவர் கூறியதாவது: போர்க்குற்றம் தொடர்பாக, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து, இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதைச் சமாளிக்க வழி தெரியாமல், ராஜபக்ஷே திண்டாடுகிறார். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், இலங்கைக்கான நிதி உதவிகளை நிறுத்தியுள்ளன. இந்நிலையில், மேற்கத்திய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சி காரணமாக, இலங்கையின் நிதி ஆதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும், அவர் தெளிவாக இருக்கிறார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில், நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என, இந்தியாவும் வலியுறுத்தி வருகிறது. உள்நாட்டு விவகாரத்தில், இந்தியாவின் தலையீட்டை, இலங்கை அரசு விரும்பவில்லை. அதேசமயம், சீனா இதுபோன்ற விவகாரங்களில், தலையிடுவதும் இல்லை; நிபந்தனைகள் விதிப்பதும் இல்லை. இலங்கையில் போர் முடிந்தது முதல், இதுவரையிலும் மறுகட்டுமானப் பணிகளுக்காக, ஆறு பில்லியன் அமெரிக்க டாலர்களை, சீனா வழங்கியுள்ளது. செப்டம்பர் மாதம், ஐ.நா.,வின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், சீனாவின் ஆதரவைப் பெற முடிவெடுத்து, ராஜபக்ஷே சீனாவுக்குச் சென்றுள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அமெரிக்கா வலியுறுத்தல் : ""விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள, இலங்கை அரசு முன்வர வேண்டும். இலங்கையில் என்ன நடக்கிறது என்பது பற்றி, சர்வதேச நாடுகள் அனைத்தும், உன்னிப்பாக கவனிக்கின்றன. இதை நினைவில் வைத்து, இலங்கை அரசு செயல்பட வேண்டும்'' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.