- கொள்ளை, வழிப்பறி, பிக்பாக்கெட் போன்ற குற்றங்கள் நடந்தால் பெரிய பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளும் பாதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது உலகம் முழுவதும் நவீனமயமாக்கத்தின் காரணமாக யாரும் தங்களுடன் பெரிய அளவில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என்று வந்து விட்டதால், டூத் பேஸ்ட் முதல் தங்கம் வரை கார்டு மூலமாகவே கொள்முதல் செய்து கொள்ளலாம். தெருவுக்குத் தெரு ஏடிஎம் மையங்கள் வந்து விட்டன. அதோடு தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் மட்டும் பணம் எடுக்க வேண்டியதில்லை. எந்த வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்ற நிலை உள்ளது.
நவீனமயத்துக்கு ஏற்ப மோசடிகளும் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெளிநாட்டு கிரெடிட் கார்டுகள் போல போலியான கார்டுகளை தயாரித்த ஒரு கும்பல், தமிழகத்தில் வந்து அதை பயன்படுத்தி மோசடி செய்தனர். பின் கடைக்காரர்கள், நமது நாட்டு வங்கியில் பணம் பெறுவார்கள். இந்திய வங்கி, வெளிநாட்டு வங்கியைத் தொடர்பு கொண்டால், எங்கள் வங்கி கணக்கு வைத்திருப்பவர் வெளிநாடு செல்லவில்லை என்று கூறுவார்கள். அதன்பின் வங்கிகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன.
அதில் குறிப்பாக இலங்கையை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் ஓட்டல்கள், டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் பணியாற்றுவார்கள். அவர்களிடம் ஸ்கிம்மர் என்ற சிறிய மிஷின் இருக்கும். இந்த மிஷினில் அந்த கார்டை ஒரு முறை தேய்த்து விட்டால், கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் ஸ்கிம்மர் மிஷினில் பதிவாகிவிடும். பின் ஸ்கிம்மரில் இருந்து கம்ப்யூட்டரில் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களை பதிவு செய்து, பின் போலியான கார்டுகளை தயாரித்து இந்தியா போன்ற நாடுகளில் அவற்றை பயன்படுத்தி வந்தனர்.
ஆரம்பத்தில் இந்த மோசடிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. பின் கடைக்காரர்கள் உஷாரான பிறகுதான், அவர்களை சந்தேகப்பட்டு மோசடி ஆசாமிகளை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதன்பின் மோசடி கும்பல்கள் பிடிபட்டன. அதன்பின்னரும் இந்த மோசடிகள் நிற்கவில்லை.
இந்தநிலையில் கடந்த மாதம் மட்டும் 70 பேர், ஏடிஎம் கார்டு மூலம் தங்களுடைய பணம் எடுக்கப்பட்டிருப்பதாக சென்னை போலீசில் புகார் செய்தனர். ஒவ்வொரு கார்டு மூலமும் ஸி50 ஆயிரம், ஸி70 ஆயிரம் வரை எடுக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தப் பணம் எந்த வகைகளில் எடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தனர். அப்போது ஏடிஎம்மில் பணம், கடைகளில் பொருட்கள் என்று எடுக்கப்பட்டிருந்தது. இதனால் முதலில் ஏடிஎம் மோசடியை கையில் எடுத்த போலீசார், அதிகமாக எந்த ஏடிஎம் மிஷின் மூலம் எடுக்கப்பட்டிருந்தது என்பதைப் பார்த்தனர்.
மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கீழ்ப்பாக்கத்தில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் என்று தெரிந்தது. ஏடிஎம்மில்தான் கேமரா, செக்யூரிட்டி இல்லை. இதனால் பணம் எடுக்கப்பட்ட நாளில், அந்த மையத்துக்கு வந்தது யார் என்று செல்போன் டவர் மூலம் செல்போன் நம்பர் சேகரிக்கப்பட்டது. அதில் ஒரு லட்சம் செல்போன் நம்பர்கள் கிடைத்தன. அதை அலசியபோது ஒரே நம்பரில் 4 ஏடிஎம்களில் இருந்தும் ஒருவர் பேசியிருப்பது தெரியவந்தது. இதனால் அவர்தான் மோசடி கும்பலின் தலைவன் என்று தெரிந்தது.
அதேநேரத்தில் மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மிஷினில் மட்டும் சிசிடிவி கேமரா இருந்தது. அந்த கேமராவில் பார்த்தபோது இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த உமேஷ் (எ) ஷாட்டி(27) என்பவர் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இவர் ஏற்கனவே 2009, 2010ம் ஆண்டுகளில் கிரெடிட் கார்டு மோசடியில் கைது செய்யப்பட்டவர் என்று தெரியவந்தது. இவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் ஷாக்காகிவிட்டனர். காரணம், எப்படி எல்லாம் கிரெடிட், ஏடிஎம் கார்டு மோசடியில் ஈடுபட்டனர் என்று தெரியவந்ததுதான். அவர்களிடம் இருந்து 3 கார்கள், ஸ்கிம்மர் மிஷின், என்கோடர் மிஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 200க்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளும் கைப்பற்றப்பட்டன. அவரிடம் இருந்த கம்ப்யூட்டரை ஆய்வு செய்தபோது 2 ஆயிரம் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், ஏடிஎம் கார்டுகளின் தகவல்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு போலி கார்டுகள் தயாரிக்கத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் பெரும்பாலான நம்பர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவை. குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் எண்களாகும். 3 வகையாக இந்த கும்பல் மோசடியில் ஈடுபடுகிறது.
ஷாட்டி கொடுத்த தகவலின்படி 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி மனோஜ்குமார் உட்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களைப் பிடித்தாலும் இந்த மோசடியை தடுக்க முடியாது. வங்கிகள் நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும் என்கிறார். மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் உயர் அதிகாரி.
இந்தியாவில் மட்டும்தான் மிகப் பெரிய அளவில் இதுபோன்ற மோசடி நடக்கிறது. அதற்கு காரணம், ஏடிஎம்மில் கேமரா இல்லை. செக்யூரிட்டிகள் இல்லை. கார்டுகளிலும் சரியாக ரகசியக் குறியீடு இல்லை. இதனால் மோசடியை தடுக்க முடியவில்லை. வெளிநாடுகளில் உள்ளதுபோல ஏடிஎம், கிரெடிட் கார்டுகளில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் ஒருவரது கார்டை மற்றொருவர் எடுக்க முடியாது என்றார் அந்த போலீஸ் அதிகாரி. ஆனால் வங்கிகள் தரப்போது, இது சாத்தியமில்லாதது. கேமரா, செக்யூரிட்டிக்கு வேண்டுமானால் உத்தரவாதம் தரலாம். ஆனாலும், அதை உடனடியாக எல்லா ஏடிஎம்மிலும் செய்யமுடியாது. படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்கின்றனர். இதனால் இந்த மோசடியையும் தடுக்க முடியவில்லை. அதனால் வாடிக்கையாளர்களே பணம் எடுத்தவுடன் தங்களது பின் நம்பரை மாற்றினால்தான் தற்காலிகமாக இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
3 வகை மோசடி
கீஹோல் கேமரா&ஸ்லாட்
செக்யூரிட்டியோ, கேமராவோ இல்லாத ஏடிஎம் மையத்தை தேர்ந்தெடுக்கின்றனர். ஏடிஎம் மிஷினை படம் எடுத்து கனடாவில் உள்ள ஸ்டீவ் என்பவருக்கு அனுப்புகின்றனர். அவர், கார்டு செலுத்தும் துவாரம் அளவுக்கு சிறிய ஸ்லாட் என்ற கருவியை தயாரித்து அனுப்புகிறார். அதை இந்த ஏடிஎம்மில் கார்டு செலுத்தும் துவாரத்தில் வைக்கின்றனர். பின் மானிட்டர் அருகே சிறிய கேமராவையும் வைத்து விட்டுச் செல்கின்றனர்.
பின் ஏடிஎம் மையத்தின் அருகே லேப் டாப்புடன் நிற்கின்றனர். யாராவது பணம் எடுக்க கார்டை செலுத்தினால், முதலில் இவர்கள் பொறுத்திய ஸ்லாட் கருவியில் பதிந்து விட்டுத்தான் உள்ளே செல்லும். அப்போது வெளியில் வைத்திருக்கும் லேப் டாப்பில் ஏடிஎம்மின் ரகசிய குறியீடுகள் அனைத்தும் வந்து விடும். பின், கேமரா மூலம் அவர்கள் போடும் பின் நம்பரையும் லேப் டாப்பிலேயே பார்த்து விடுகின்றனர். பின் புதிய ஏடிஎம் கார்டை தயாரித்து விடுகின்றனர்.
ஸ்கிம்மர் மூலம் கார்டு
பெட்ரோல் பங்கில் ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து காரில் வரும் 10 பேரின் கார்டை கருவியில் தேய்க்கும்போது மோசடி கும்பல் கொடுக்கும் ஸ்கிம்மர் கருவியிலும் தேய்த்து தரும்படி கூறுகின்றனர். அவர்கள் தேய்த்துக் கொடுத்தவுடன் அதை வைத்து கம்ப்யூட்டரில் தகவல்களை பதிவு செய்து, என்கோடர் கருவி மூலம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை தயாரிக்கின்றனர்.
கூரியர் சர்வீஸ் மூலம் மோசடி
வங்கிகளில் இருந்து கூரியர் சர்வீஸ் மூலம் ஏடிஎம் கார்டுகள் அனுப்பப்படும். கூரியர் ஊழியர்கள் துணையுடன் கவரைப் பிரித்து, ஏடிஎம் கார்டை எடுத்து, ஸ்கிம்மர் மிஷினில் தேய்த்து, என்கோடர் கருவி மூலம் ஏடிஎம் கார்டை தயாரிக்கின்றனர். தபால்களை கிழிக்காமல் பிரிக்க ஹேர் ஹாட் கன் என்ற கருவியை பயன்படுத்துகின்றனர்.
ஷாட்டி யார்?
யாழ்ப்பாணம்தான் ஷாட்டியின் சொந்த ஊர். 1992ல் கனடாவுக்கு அப்பாவுடன் சென்றார். பிளஸ் 2 வரை படித்தார். பின் அப்பா வேலை செய்யும் கலர் லேபில் வேலை கிடைத்தது. அப்போதுதான் ரஷ்யாவை சேர்ந்த ஸ்டீவ் என்பவரின் பழக்கம் கிடைத்தது. ஆரம்பத்தில் அவர் கொடுக்கும் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்துக் கொடுத்தான். அதில் கமிஷன் கிடைத்தது. பின் அவரிடம் இருந்து ஸ்கிம்மர், என்கோடர் மிஷின் மூலம் கார்டு தயாரிக்கும் கலையை கற்றான். பல வழக்குகளிலும் சிக்கினான்.
அதிகமான வழக்கில் சிக்கியதால், கனடா நாட்டில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இலங்கைக்கு 2007ல் அனுப்பப்பட்டான். பின் 2009ல் தமிழகம் வந்தான். அப்போதே மோசடியில் சிக்கினான். இவனுக்கு சென்னையில் உள்ள மோசடி கும்பல்களின் பழக்கம் கிடைத்தது. அவர்களுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டான். தன்னுடைய கூட்டத்தில் இலங்கையை சேர்ந்தவர்களைத்தான் சேர்த்திருந்தான்.
தனி வெப்சைட்
வெளிநாட்டில் உள்ளவர்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் அனைத்தும் மோசடிக்கு பயன்படுத்தும் ஒரு வெப்சைட்டில் இடம்பெற்றிருக்கும். அந்த வெப்சைட்டை தொடர்பு கொண்டால், நம்முடைய வங்கிக் கணக்கை கேட்கும். அப்போது அதற்கு குறிப்பிட்ட அளவு பணம் கேட்கும். அதை செலுத்தி விட்டால், நம்முடைய இ மெயில் முகவரிக்கு அனைத்து தகவல்களையும் அனுப்பி விடும். அதில் இருந்து போலி கிரெடிட் கார்டுகளை தயாரிக்கலாம். ஷாட்டியும் அதேபோலத்தான் 2 ஆயிரம் கார்டுகளின் தகவல்களை வாங்கியுள்ளார்.
