-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

பாரதி கண்ட புதுமை பெண்

இன்று பெண்கள் தடம் பதிக்காத துறைகளே இல்லை எனலாம். விளையாட்டு, ராணுவம், காவல், வணிகம் எனப் பற்பல துறைகளில் இவர்களின் சாதனைப்பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. பாரதி கண்ட புதுமை பெண்களாய் இவர்கள் வெற்றி உலா வருகின்றனர். அத்தகையோரில் ஒருவர்தான் பத்மினி.
ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் தொழிலைச் செய்து வரும் இவர் பல கம்பெனிகளுக்கு இயக்குநர் மற்றும் புரோமோட்டராகவும் இருந்து வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் இவரைச் சந்தித்தபோது தனது வெற்றிக்கான  ஃபார்முலா குறித்துப் பேசினார்.    

""எனக்கு சொந்த ஊர் சேலம். கிருஷ்ணகிரியில் உள்ள புனித அனிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்தேன். அதன்பிறகு, கோயம்புத்தூரில் ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக்கில் சேர்ந்து, டெக்ஸ்டைல் ப்ராசசிங் பட்டயப்படிப்பு முடித்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் கல்லூரியில் சேர்ந்து படிப்பது காலத்தை வீணாக்கும் செயல் ஆகும். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மேற்கொண்டு படிப்பை அஞ்சல் வழியில் தொடர, முடிவு செய்து 1989 - ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி கணிதம் படித்தேன். மேலும் பிறரிடம் வேலை செய்வதில் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே சொந்தமாகத் தொழில் நிறுவனம் தொடங்க முடிவு செய்தேன்.  எனவே 2007 - ம் ஆண்டில் "இந்திரா ஏர்' ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தைத் தொடங்கினேன். இப்படி ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் தொழிலுக்கு டெல்லியில் உள்ள "சென்ட்ரல் டைரக்ட்ரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன்' என்ற மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து உரிமம் வாங்க வேண்டும். இதற்கு எனக் கட்டணம் உண்டு.  இந்தக் கட்டணத்தை இவர்கள்தான் நிர்ணயம் செய்கிறார்கள். நம்மிடம் உள்ள ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும், எந்தக் காலகட்டத்தில் நாம் இதற்கான உரிமம் பெற விரும்புகிறோம் என்பதன் அடிப்படையிலும் இந்தக் கட்டணம் அமையும். மேலும் ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  என்னிடம் தற்போது மூன்று இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர் ஒன்றும், ஏழு இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர் ஒன்றும் இருக்கின்றது. இவற்றின் மதிப்பு முறையே, ஐந்து மற்றும் ஏழு கோடிகள் ஆகும். மூன்று இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டரின் ஒரு மணிநேர வாடகை ஐம்பதாயிரம் ரூபாய். ஏழு இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டருக்கு ஒருமணி நேர வாடகை ரூபாய் எண்பதாயிரம் வசூலிக்கிறோம். நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது, வானத்தில் இருந்தவாறு பூக்களைத் தூவி வாழ்த்தவும், பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கும், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்துச் செல்கின்றனர். அண்மையில், கல்லூரி மாணவியர் சிலர் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கள் தோழியின் பிறந்த நாளினை வானில் கொண்டாடினர். "இந்திரா ஏர்' என்ற இந்த நிறுவனத்தைத் தவிர, ஏ.பிசி. கன்சல்டன்சி, கணினி நிறுவனம், ட்ரீம் கேசில் போன்ற நிறுவனங்களுக்கு இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறேன்.  குடும்பம், ஹெலிகாப்டர் வாடகைக்கு விடுதல், கம்பெனிகளின் நிர்வாகம் இம்மூன்றையும் நிர்வகிப்பதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இதுவரை இல்லை. ஏனென்றால், இம்மூன்றிற்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கிவிடுகிறேன். இந்த மூன்றில் குடும்பத்திற்குதான் முதலிடம். என் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் என்னால் இத்தனை தொழில்களைத் திறம்பட நடத்தி வர முடியாது. ஆணாதிக்கம் நிறைந்த சமூகம் என்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.  என்னுடைய இந்த வெற்றிகளுக்கு என் பெரியம்மா பையன் வெங்கட்ராமன் மற்றும் என்னிடம் வேலை செய்கின்ற ஆண்கள்தான் முக்கிய காரணம். அவர்களுடைய ஆலோசனை, ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் இந்த அளவிற்கு சாதித்து இருக்க முடியாது. சாதிக்க நினைக்கின்ற பெண்களுக்குத் தடைகள் எதுவும் இல்லை. உழைப்பின் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான் பெண்களால் சாதிக்க முடியும். "ஃபிக்ஸ்ட் விங்' என்ற சிறிய விமானங்கள் வாங்குவதும், ஹெலிகாப்டர்களை நிறுத்துவதற்கான ஹெலிபேட் ஒன்றை அமைப்பதும்தான் என்னுடைய எதிர்கால லட்சியம். உயர்ந்த இலக்கினை அடைய, நம்முடைய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சொன்ன மாதிரி, ஒவ்வொருத்தருக்கு உள்ளேயும் கனவு ஒன்று இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதுதான் நம்மை வாழ்வில் உயர்த்தும்''  என்றார்.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?