-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

மேதகு. தலைவர் பிரபாகரன் என்றும் கோடானுகோடி தமிழ் சமுதாயத்தின் நிழல்

ஏமாற்றம் என்ற வார்த்தையை நினைக்கவே விரும்பாமல் ஏமாற்றத்தை அளித்த பலருக்கும் போராட்டத்தையே பதிலாய் அளித்தவரைப்பற்றி வந்த கருத்துக்கு மாற்றுக்கருத்தை அளித்துள்ள ஒரு கருத்தாளரின் என்ன ஓட்டத்தின் மறுபதிப்பு.  


 
ஈழமக்களை நம்பவைத்து ஏமாற்றிய புலித்தலைவர் என்கிற ஓர் பதிவு அண்மையில் தமிழ்மணத்தில் கண்ணில் பட்டது. இலங்கைப்பதிவர் நிருபனால் எழுதப்பட்டது. சரி, இப்படி ஈழம் தொடர்பாக எத்தனையோ எழுத்துகளை, மாற்றுக்கருத்துக்களைத் தான் அடிக்கடி படிக்கிறோமே என்று விட்டுத்தள்ளிவிட்டுப் போகலாம் என்று தான் நினைத்தேன். ஏனோ மனம் ஒப்புக்கொள்ளவில்லை.ஈழம் பற்றி பதிவுலகம் முதல் அல்ஜசீரா, அமெரிக்க சி.என்.என்., பி.பி.சி. வரை தொடங்கி உலகின் முன்னணிப் பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதென்பது தமிழனின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. படிப்பதோடு நிற்பதில்லை. எந்தவொரு ஊடகமானாலும் ஈழம் என்று வந்தால் ஜனநாயக கருத்து சுதந்திரத்தை இந்த விடயத்தில் கடைப்பிடிக்கவும் தவறுவதில்லை.

பயங்கரவாதத்திற்கு எதிராக எழுதும் எழுத்தாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் முதல் கே.பி. என்கிற குமரன் பத்மநாதன் சொல்பவைகளை படித்தாலும் அவைகளை நான் கடந்து வந்துவிடுவதுண்டு. மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லாத இடத்தில் நான் நேரம் கடத்துவதில்லை. ஆனால், நிரூபனின் கருத்துக்கு என் மாற்றுக்கருத்தை பதியலாம் என்று நினைக்கிறேன். பதிவுலகில் மாற்றுக்கருத்தை மறுக்கும் குணம் உண்டு என்றாலும் அதை மதிக்கும் பண்பும் உண்டு.
அந்தக் கட்டுரையின் முக்கியமாக முன்வைக்கப்பட்ட ஓர் கருத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மக்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு விட்டார் என்பது. இதைப் படித்ததும் என் அறிவுக்கு எட்டியது என்னவென்றால் ஈழப்போராட்டம் என்பது தனிச்சையான ஜனநாயக மக்கள் எழுச்சியாய் உருவானதல்ல. மக்களோடு மக்களாய் நின்று பிரபாகரன் என்பவர் போராடியிருக்க. அதன் அடிப்படை ஆரம்பம் வேறு என்பது என் சிற்றறிவுக்கு கூட எட்டுகிறது.
சிங்கள இனவாதக் கொள்கைகளும், துப்பாக்கிகளும் எங்களை பதம்பார்த்தபோது தலை தெறிக்க ஓடியே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் நாம். எங்களை விரட்டியவர்களுக்கும், கொன்றுகுவித்தவர்களுக்கும் உறுதியாய் நின்று பதில் சொன்னவர் தான் இன்று தமிழினத்துரோகியாய் சிலரால் முத்திரை குத்தப்படும் பிரபாகரன் என்பவர்.
கட்டுரையின் ஆரம்பத்தில் மக்களிடம் இருந்து தன்னை தனிமைப் படுத்திக்கொண்டவர் ஆதலால் மக்களுக்கு அவரிடம் நெருக்கம் குறைந்தது என்கிறது கட்டுரை. பிறகு, புலிகள் தலைவர் நம்பவைத்து ஏமாற்றினார் என்பது கொஞ்சம் முன்னுக்குப் பின் முரண் என தோன்றுகிறது.
ஒரு வார இறுதிக் களியாட்டத்திற்கே நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வாறன் என்று சொல்லுபவர்கள் எம்மில் ஏராளம். ஈழவிடுதலை என்று ஆரம்பித்துவிட்டு இந்தியாவின், சிங்கள ஆட்சியாளர்களின் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்த பிறழ்ந்து போன மனப்போக்கில் இருந்து கொஞ்சம் விலகி உலகமே ஒன்றாய் நின்றால் தான் அழிக்க முடியும் என்கிற நிலையில் உள்ள ஓர் உன்னதமான விடுதலை அமைப்பை கட்டியெழுப்பி இன்று உலகம் முழுக்க ஈழமக்களின் உரிமைகள் குறித்து பேசவைத்தவரை விமர்சிக்கலாம். தப்பில்லை. அது அவரவர் தனிப்பட்ட கருத்து, அனுபவம், புரிதல் சார்ந்தது.

ஆனால், மனதில் தோன்றியதெல்லாம் மாற்றுரைக்க முடியாத மகத்தான தத்துவங்கள் என்கிற ரீதியில் புலிகளின் தலைமையை விமர்சிக்கிறேன் என்பது அமெரிக்க-இந்திய-இலங்கை தமிழர் விடுதலை எதிர்ப்பு கொள்கைகளுக்கே வழி அமைத்துக் கொடுப்பதாய் அமையும். பிரபாகரன் என்பவர் ஈழப்போராட்டத்தை முன் நின்று நடத்த முதல் 1956 ம்ஆண்டுமுதல் அரசியல் யாப்பிலிருந்து, உங்கள் வாழ்விடத்திலேயே உங்கள் உரிமைகள், உறவுகளின் உயிர்கள், உடைமைகள் பறிக்கப் படவில்லையா? அல்லது,எங்கள் தமிழ்ப் பெண்கள் சிங்களப் படைகள், கூலிகளால் சிதைக்கப்பட்டதில்லையா?


மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயகம் என்பது வேகமாகப் பரவத்தொடங்கிய 1970, 1980 களின் ஆரம்பத்திலேயே எங்களுக்குரிய புதைகுழிகள் இலங்கை ஜனநாயக அரசியல் யாப்பில் தோண்டப் பட்டுவிட்டன. திருத்தி எழுதப்பட்ட இலங்கை ஜனநாயக சமத்துவ குடியரசு யாப்பில் கூட எப்போதாவது ஈழத்தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கியதுண்டா! இல்லை என்கிற பதில் எல்லோருக்கும் தெரியும். எங்களுக்கு கிடைத்தது அவசர காலச்சட்டமும், பயங்கரவாதத்துக்கு எதிரான தடைச்சட்டம் என்கிற தமிழர்களுக்கு எதிரான சிங்கள போக்கை நியாயப்படுத்தும் அரசியல் சட்டங்கள் தான்.
அவ்வாறு இலங்கையின் ஜனநாயக அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்தவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனே. அவர் பற்றி த. வி. பு. தலைவர் சொன்னது, ஜெயவர்த்தனே ஓர் உண்மையான பெளத்தர் ஆக இருந்திருந்தால் நான் துப்பாக்கி தூக்கியிருக்க மாட்டேன் என்பது தான். யாருடைய விடுதலைக்காக ஆயுதம் என்தினாரோஅவர்களையே ஏமாற்றினார் என்று சொல்கிற தேவை எங்கள் விடுதலையை விரும்பாத அமெரிக்க-இந்திய-இலங்கை கூட்டணிக்கு வேண்டுமானால் இருக்கலாம். அது குறித்து தமிழர்கள் கொஞ்சம் மேம்போக்காக இல்லாமல் காரண காரியத்தொடர்போடு யோசித்தால் நல்லது. அப்போதும் சரி, இன்று ஈழப்போராட்டம் ஈழத்தில் முடக்கப்பட்ட போதும் சரி போராடியவர்களை விமர்சிப்பதோடு எங்கள் கடமைகளை முடித்துகொள்ளப் போகிறோமா, அதன் எதிர்விளைவுகளை யோசிக்காமலே.
பிரபாகரன் என்கிற ஓர் தனிமனிதன் ஈழவிடுதலைக்காய் போராடத் தொடங்கிய பின்னர் தான் தமிழினம் இன்னல்பட்டது என்றால், எதற்காக பிரபாகரனை ஆரம்பத்திலேயே தடுக்கவில்லை?
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற போர்வையில் ஈழவிடுதலைக்கான அரசியல் கதவுகள் புலிகளின் பெயரால் அடைக்கப்பட்டுவிட்டதாகத் தான் 'மாமனிதர்' தராக்கி சிவராம் நிறையவே எழுதிவைத்தார். அது தானே மறுக்கமுடியாத உண்மையும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற சதியை புலிகள் எப்படி நீண்டநாட்கள் தாக்குபிடித்தார்கள் என்பது அவரது தீர்க்கதரிசனமான எழுத்தை படித்தால் தான் புரியும். புலிகள் குற்றம் இழைத்தார்கள், அதை செய்தார்கள், இதை நோன்டினார்கள் என்று அவர்களின் பெயரால் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தந்திரமாக மறுக்கப்படுகிறது என்பது என் வரையில் தமிழர்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அங்கே பதிவில் சொல்லப்பட்ட இன்னோர் கருத்து 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரபாகரன் சுதுமலை கூட்டத்தில் தோன்றியதன் பின்னர் மக்கள் பார்வையில் படவில்லை அல்லது தோன்றவில்லை. இந்த இந்திய-இலங்கைஒப்பந்தத்தின் பின்னர் தான் மாத்தையா என்பவர் இந்திய உளவுத்துறையான ரா என்கிற அமைப்பால் பிரபாகரனை இல்லாதொழிக்க ஓர் கருவியாக்கப்பட்டவர் என்பது எல்லோரும் அறிந்த பரகசியம். இந்த உயிர் ஆபத்துக்களை எல்லாம் மீறி ஒரு விடுதலை அமைப்பை நடத்துபவர் பொதுசனத்தின் மத்தியில் தோற்றமளித்து எதை சாதித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஊடகங்களை சந்திப்பதில்லை என்கிற ஓர் கருத்தும் முன்வைக்கப்பட்டது. ஒரு விடுதலை அமைப்பின் தலைமை ஊடகங்களை சந்திக்காமல் இருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதற்கு அவர் இந்திய ஊடகவியலாளரான அனிதா பிரதாப்புக்கு சொன்ன காரணம், தன்னுடைய கூற்றுக்களை யாரும் திரிவுபடுத்தி கூறக்கூடாது என்பதும் தான். அவர் அதிகம் நம்பிக்கை வைத்து சந்தித்த ஒரே ஊடகவியலாளரும் அந்த இந்திய ஊடகவியலாளர் தான். நான் அறிந்தவரை புலிகளின் போராட்ட நியாயங்களை உலகிற்கு சரியான முறையில் அறியத்தந்ததும் அவரே. உலகில் எத்தனையோ விடுதலை அமைப்புகள் அதன் தலைவர்கள் என்று எல்லோரும் நேரடியாக ஊடகங்களுக்கு பேட்டியா கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

புலிகளும் அதன் தலைமையும் ஈழவிடுதலைக்காய் போராடினார்கள். அவர்களின் பின்னால் போன ஈழத்தமிழர்கள் ஏராளம் தான். அதை அந்தக் கட்டுரையே சொல்கிறது. மக்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டவரின் அல்லது விலகி இருந்தவரின் பின்னால் எதுக்காக, எந்த நம்பிக்கையில் மக்கள் போனார்கள். ஆனால், புலிகளின் நோக்கம் அவர்களை நம்பவைத்து ஏமாற்றுவதில்லை. மக்களை நம்பவைத்து ஏமாற்றும் ஓர் தலைவன் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையே ராணுவ சித்திரவைக்குள் சிக்கிக்கொள்ளும் அளவிற்கு காத்திருக்காமலே தப்பிக்கவைத்திருக்கலாமே!
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து தன் குடும்பத்தை அவர் ஒருபோதும் விதிவிலக்காய் ஆக்கொண்டதில்லையே! பிரபாகரனை பெற்றெடுத்தது தான் குற்றம் என்று அவர் தாயாரை இந்தியா அலைக்கழித்ததே! இதெல்லாம் யாரும் அறியாதது அல்லவே.

இறுதிப்போரில் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தார்கள், மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்கிற கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்கள் அதே உறுதியுடன், வேகத்துடன் சிங்கள பேரினவாதத்தின், சிங்கள ராணுவத்தின் கொடூரக் குற்றங்களையும் சர்வதேசத்தில் விசாரிக்க வழிவகை செய்யவேண்டியது தானே முறை. ஆனால், அவர்கள் செய்யமாட்டார்கள். இழுத்தடிப்பார்கள். அலையவிடுவார்கள்.

இதெல்லாம் எங்கே போய் முடியுமென்று மனதில் கேள்விய எழுந்தால், "தமிழ் சமூகம் இரண்டாய் பிளவுபட்டுபோகும் இழிநிலையில்" என்று பதில் வருகிறது. பிரபாகரனையும், புலிகளையும் திட்டித்தான் பிழைப்பு நடத்தவேண்டும் என்கிற மோசமான கூட்டுமனோநிலை எம் ஈழத்தமிழ் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
பிரபாகரன் வெள்ளைக்கொடியுடன் சமாதானம் பேச வரும்போது சுட்டுவிடு என்று தனது ராணுவத் தளபதிக்கு முன்னாள் இந்திய பிரதமர் உத்தரவு பிறப்பித்த போதும், மறுத்துரைத்த போர் தர்மம் மீறாத அந்த இந்திய இராணுவத்தளபதிக்கு இருக்கும் கடுகளவு நேர்மையேனும் எம்மிடம் இல்லாது போனது தான் எங்கள் பெருமையோ??
Reference: http://lulurathi.blo...og-post_15.html

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?