ஒரு நாள் அந்தப் பெரிய நிறுவனத்தின் உள்ளே நுழைந்த அனைத்துப் பணியாளர்களுக்கும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் வரவேற்பறையில் காணப்பட்ட அந்த அறிவிப்பு.
"நேற்றுவரை இந்த நிறுவனத்தில் உங்கள்
முன்னேற்றத்தைத் தடுத்து வந்த நபர் இன்று காலை இறந்துவிட்டார். உங்களுக்கு விருப்பமிருப்பின் அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள ஆடிட்டோரியத்திற்கு வரவும்."
இதைப் படித்தவுடன் முதலில் நம்முடன் பணி புரிந்த ஒருவர் இறந்துவிட்டார் என்பதில் எல்லோருக்கும் கொஞ்சம் வருத்தம் என்றாலும் பின்னர் நம் முன்னேற்றத்தைக் கெடுத்த நபர் யாராக இருக்க முடியும்? அப்படிப்பட்டவர் யார் என்று தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் அனைவரிடமும் மேலோங்கியது. அனைத்துப் பணியாளர்களும் சாரிசாரியாக இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், அந்த நபர் யாரெனத் தெரிந்துகொள்ளவும் வேண்டி வரிசையில் வந்து நிற்கத் தொடங்கினர்.
ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து சவப்பெட்டியை நோக்கிக் குனிந்து பார்த்தனர். பார்த்ததும் பேச்சிழந்து அதிர்ச்சியில் உறைந்தனர். பின் 'உண்மைதான். என் முன்னேற்றத்துக்குத் தடை இந்த நபரே அன்றி வேறு யாரும் இல்லை' என்று உணர்ந்துகொண்டனர்.
அப்படிப்பட்ட நபர் யார்? அந்த நிறுவனத்தில் இருப்பவர்கள் அனைவரது முன்னேற்றத்தையும் தடுத்தது யார்?
அந்தச் சவப்பெட்டியின் உள்ளே இருந்தது என்ன தெரியுமா? ஒரு பெரிய நிலைக்கண்ணாடி. அதன் பக்கத்தில் ஒரு வாசகமும் எழுதப் பட்டிருந்தது. 'உங்களது வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது யார் தெரியுமா? நீங்கள்... நீங்கள் மட்டுமே!!!'
உண்மைதானே! எதையும் முடிக்கும் ஆற்றலுடன் நாம் பிறக்கிறோம். நம் செயல்பாட்டுக்கு ஏற்ற வெற்றியையோ தோல்வியையோ அடைகிறோம். ஒரு ஆங்கிலப் பொன்மொழி இதை அழகாகக் குறிப்பிடுகிறது.. "There may be so many people behind your success. But you are the reason for your failure."
இப்பொழுது யோசியுங்கள். உங்களை விட உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை யாருக்கு இருக்கிறது? உங்களை நீங்களே நம்பவில்லை என்றால் உங்களை யார் நம்புவார்கள்?
யானையின் பலம் தும்பிக்கையிலே, மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பார்கள் பெரியவர்கள். "Man of self confidence is the man of success" என்பது இன்னொரு பழமொழி.
உங்கள் மீதான உங்கள் நம்பிக்கையினை வளர்ப்பது எப்படி?
1. எப்பொழுதும் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தல், நேர்வழியில் பயணித்தல்
இது எளிதான விஷயமல்ல என்றாலும், நேர்மை என்பது எப்பொழுதும் சோதனைகளைச் சந்திக்கக் கூடியது என்பது உண்மையானாலும், சோதனைகளின் முடிவில் உங்கள் மீது உங்களுக்கே உண்டாகும் மரியாதையும், நம்பிக்கையும் அளப்பரியது.
2. அடுக்கடுக்கான தடைகளும் பிரச்னைகளும் தொடர்ந்து தாக்குகின்ற பொழுது, புதிய புதிய சிக்கல்கள் உருவாகின்றபொழுது... உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று கனவு காணுவதும் அதை அமைத்துக்கொள்வதும் உங்கள் உரிமை. வெளியில் இருந்து வருகின்ற தடைகள் பெரிய தடைகள் அல்ல. நம் மனத்தடையே பெரிய தடை. புற உலகால் உண்டாக்கப் படும் சவால்களும் மாற்றங்களும் நீங்கள் யார் என்று அறிய உங்களுக்கு ஒரு உரைகல்லே அன்றி உங்களுடைய தடைக்கற்கள் அல்ல.
ஒவ்வொரு முறை நீங்கள் சோர்வடைகின்ற பொழுதும் ஒரு கண்ணாடி முன் நின்றுகொள்ளுங்கள். என் முன்னேற்றத்துக்கும், வீழ்ச்சிக்கும் நானே காரணம். நான் வீழப்போவதில்லை.... எத்தனை முறை எரிந்தாலும் மீண்டும் உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போன்றவன்(ள்) நான் என்று உங்களுக்கு நீங்களே உறுதிமொழி கொடுத்துக்கொள்ளுங்கள்.
எளிதாகக் கிடைக்குமானால் வெற்றி கூடக் கசந்துவிடும். போராட்டங்களுக்குப் பிறகு கிடைக்கும் வெற்றிதான் ருசிக்கிறது. எனவே உங்கள் இலக்கை அடைய உங்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு தடையும், உங்களை மேலும் வலிமையாக்கி, உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்க உதவும் சாதனம் என்று நம்புங்கள்.
உங்கள் மனதில் ஏற்படும் எதிர்மறையான எண்ணங்களை, நேர்மறையாக மாற்றுவது அவசியம். விமானத்தில் இருந்து விழுந்தால் உயிர் பிழைக்க முடியாதே என்று நினைப்பது எதிர்மறை. அதில் இருந்து தப்பிக்க பாராசூட்டைக் கண்டறிந்தது நேர்மறை. உங்கள் எதிர்மறை எண்ணங்கள் சங்கடங்கள் வருகையில் அவற்றை எதிர்கொள்ள முன்னேற்பாட்டுடன் இருக்க உதவ வேண்டுமே அன்றி உங்களைக் கீழே தள்ளுவனவாக இருத்தல் ஆகாது.
3. 'இந்த அதிகாரி போய்விட்டால் சிக்கல் தீர்ந்துவிடும். இந்த ஊரே மோசமானது, இங்கு இருக்கும் வரை முன்னேற முடியாது, இந்த நிறுவனத்தில் வளர்ச்சி பெற வாய்ப்பே இல்லை' என்றெல்லாம் நாம் குறைப்பட்டுக் கொள்வதுண்டு.
உங்கள் மேலதிகாரிகள் மாறுதலோ, நீங்கள் பழகிய ஊரை விட்டு வேறு ஊருக்குச் செல்ல நேர்வதோ, நீங்கள் பணிபுரிந்துகொண்டிருந்த இடத்தை விட்டு வேறொரு நிறுவனத்தில் சேர்வதோ உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாது. உங்கள் மனதில், உங்கள் எண்ணங்களில், உங்கள் செயல்பாடுகளில் ஏற்படுகின்ற மாற்றமே உங்களை உயர்த்தக் கூடிய ஒரே வழி. என் வாழ்க்கை என் கையில் இருக்கிறது. இதற்கு முழுப்பொறுப்பாளி நானே என்ற விழிப்புணர்வே வெற்றிக்கான சாவி.
உங்களை நீங்களே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களை, செயல்களை, இலக்குகளை நீங்களே தேர்ந்தெடுங்கள். உங்கள் இலக்கில் இருந்து நீங்கள் விலகுகிறீர்களா, உங்கள் நோக்கங்கள், எண்ணங்கள் சரியானவையா என்று கண்காணியுங்கள். சோதனைகளைக் கண்டு கலங்காமல் எதிர்கொள்ளுகிறவனை வாழ்க்கை உச்சியில் கொண்டு வைக்கிறது. துவண்டு விழுபவனை இன்னும் பாதாளத்தில் தள்ளுகிறது.
எனவே- உங்களை, உங்கள் சக்தியை நம்புங்கள். நீங்கள் அளப்பரிய ஆற்றலுடன் படைக்கப் பட்டவர். சாதிக்கப் பிறந்தவர், நீங்கள் பல உயரங்களைத் தொடக்கூடியவர். உங்களை நம்புங்கள். நீங்களே உங்களை நம்பவில்லை என்றால்......வேறு யாரும் உங்கள் மீது நம்பிக்கை வைக்க இயலாது.
சவப்பெட்டியின் உள்ளே எழுதியிருந்த வாசகத்தை நினைவு படுத்திக்கொள்வோம் - 'உங்களது வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது யார் தெரியுமா? நீங்கள்... நீங்கள் மட்டுமே!!!' உங்கள் வெற்றிக்குக் காரணமும் நீங்களே! தோல்விக்குக் காரணமும் நீங்களே!!
வெற்றியாளராக மாற வாழ்த்துக்கள்!!!