-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

முல்லை பெரியாறு அணை - தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. தமிழகம்-கேரள எல்லையில் உள்ள இந்த அணையை, 1895ல் கட்டியது ஆங்கிலேயே பொறியாளர் பென்னி குக். மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில், மேற்கு நோக்கி அணைக்கட்டு அமைந்துள்ளது. அணையின் நீர் மட்ட உயரம் 152 அடி.
கொள்ளவு 15.5 டிஎம்சி.  மலைப்பாங்கான கேரளாவில் மழை பொழிவு அதிகம். ஆனால் விவசாயம் குறைவு.  இதனால் மழை நீர் வீணாக அரபி கடலில் கலந்து வந்தது. அதே நேரத்தில், கிழக்கு பகுதியான தமிழக மாவட்டங்களில், விவசாய நிலங்கள் அதிகம். மழை மிகவும் குறைவு. எனவே கேரளத்தில் வீணாகும் நீரை தேக்கி, தமிழக வறட்சி மாவட்டங்களுக்கு திருப்பிவிடும் நோக்கில், இந்த முல்லை பெரியாறு அணையை ஆங்கிலேயே அரசு கட்டியது. பொதுவாக, அணைகளின் முன் பகுதியில் மதகுகள் அமைக்கப்பட்டு பாசனத்திற்காக தண்ணீரை திறந்து, மூடும் வகையில் அணைகள் கட்டப்படும். ஆனால் முல்லை பெரியாறு அணை முற்றிலும் மாறுபட்டது. அணையின் முன் பக்கம் மதகுகள் கிடையாது. வெள்ள அபாய காலத்தில், அபரிமிதமான தண்ணீர் தானாக வெளியேற மட்டும் வெளிப்போக்கிகள் உள்ளன. இதன் மூலம் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வது தடுக்கப்பட்டது. தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், அணையில் பின்பக்கம் மலையை 2 கிமீ தூரத்திற்கு குடைந்து, குகை பாகை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், கடும் தண்ணீர் பஞ்சத்தால் தவித்த, ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பயனடைந்தன. தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் பாசன மற்றும் குடிநீர் வசதியை பெறுகின்றன. 

இந்த அணை தண்ணீரை, இந்த மாவட்டங்கள் பயன்படும் வகையில் 999 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.  அணையில் 104 அடிக்கு மேல் வரும் தண்ணீரை தான் தமிழகத்திற்கு திருப்ப வேண்டும் என்பது ஒப்பந்த ஷரத்துக்களில் ஒன்று. அதன்படிதான் குகை பாதை அமைக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 152 அடி உயரமாக இருந்தபோதிலும், 104 அடிக்கு மேல் தண்ணீர் வந்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். அணையின் கொள்ளவான 15.5 டிஎம்சியில்  9 டிஎம்சி  தண்ணீர் அணையில் இருந்து வெளியேறாது.  இந்த அளவு தண்ணீரை தேக்கி வைக்க மிகவும் உதவியாக இருப்பது, அணையில் இடது புறம் கட்டப்பட்டுள்ள பேபி அணையாகும். பேபி அணை இல்லாவிட்டால் இந்த அளவு தண்ணீரை தேக்க முடியாது.  இதற்கிடையில், அணை பலம் இழந்து விட்டதாகவும், நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்றும் கேரளா கூறியது. இதையடுத்து, மத்திய நீர் வள ஆணையம், அணையை பலப்படுத்தி முடிக்கும் வரை நீர் மட்டத்தை 136 அடியாக குறைத்துக்கொள்ளும்படி தெரிவித்தது. அதன்படி, 1979ல் அணையின் நீர் மட்டம் 152 அடியில் இருந்து 136 ஆக  குறைத்து தேக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழக அரசு, அணையை பலப்பத்தி முடித்தும் நீர் மட்டத்தை உயர்த்த கேரளா மறுத்தது.    அதன்பிறகு, இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு போனது. அணை நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ள 2006-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 18 நாளில் கேரள சட்டப்பேரவையில் அணை பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதன்மூலம் அணைகள் குறித்து எந்த முடிவும் எடுக்க அம்மாநில அரசுக்கு அதிகாரம் கிடைத்தது. அதோடு, பெரியாறு அணை, பலம் இழந்துள்ளதாக கூறி, அதன் அருகிலேயே புதிய அணை கட்டப்போவதாக கேரளா அறிவித்துள்ளது.  ‘இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது, கேரள அரசு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், புதிய அணை கட்ட அனுமதிக்க கூடாது“ என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

உச்சநீதிமன்றம்,  ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை நியமித்து, மீண்டும் விசாரித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது. அந்த குழு அணையில் ஆய்வு செய்தது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அணை நீரில், வீரர்கள் மூழ்கி அடிப்பகுதியின் பலத்தை ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கையை பெற்றுள்ளது.  குழுவில் இரு மாநில அரசு சார்பிலும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னையில், தமிழகம் அடுத்த கட்டத்தை எதிர்நோக்கியுள்ளது. முல்லை பெரியாறு அணை நீர் மட்ட உயரம் 1979-ல்  152ல் இருந்து 136 ஆக குறைக்கப்பட்டு, 32 ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது. 136 அடி தேங்குவது ஆண்டு முழுவதும் இல்லை. தென்மேற்கு பருவமழை காலங்களில் ஒரு வாரமும், வடகிழக்கு பருவ மழை காலங்களில் 10 நாட்களும் தான் 136 அடி வரை தண்ணீர் தேங்கும்.  எனவே அணை உடைந்து விடும் என்ற கேரளாவின் குற்றச்சாட்டு தவறானது. நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் இங்கிலாந்து பொறியாளர் பென்னி குக் வடிவமைத்து உலகமே அதிசயிக்கும் வகையில் கட்டி இருக்கிறார் என்பது நிபுணர்கள் ஆய்ந்து அறிந்த உண்மையாகும். 

எனவே கேரள புதிய அணை கட்டும் திட்டத்தை தடுத்து, முல்லை பெரியாறு அணை காக்கப்படுமா? தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரியாறு அணை குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்திய பாசன விவசாயிகள் சங்க தலைவர் கேஎம்.அப்பாஸ் கூறும்போது “கேரளா புதிய அணை கட்டும் பகுதியில் புலிகள் சரணாலயம் இருப்பதால் மத்திய சுற்றுச் சூழல் வனத்துறை அனுமதி தேவை. அதை தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அனுமதிக்க கூடாது. இது தீர்வுக்கு ஒரு வழியாக இருக்கும்“ என்றார். நதிகள் இணைப்பின் முன்னோடி:  நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முன்னோடியாக முல்லை பெரியாறு, வைகை நதிகளை இணைத்து வைகை அணை உருவாக்கப்பட்டது. மலையை குடைந்து குகை வழியாக அணையின் பின் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதகு வழியாக தமிழகத்திற்கு தண்ணீர் வருகிறது. வைகை நதியுடன் இணைகிறது.  கங்கை, காவிரி போன்ற நதிகள் இணைப்பு திட்டம் பேசப்படும் காலகட்டத்தில், நிறைவேறி முடிந்த பெரியாறு, வைகை நதி நீர் இணைப்பு முன்னோடி திட்டத்திற்கு சோதனை எழுந்துள்ளது.


பேபி அணை மீது குறி ஏன்?

பெரியாறு மெயின் அணை கட்டுமான பணி நடக்கும்போது, தண்ணீர் செல்வதற்காக இடதுபுறம் தோண்டப்பட்ட கால்வாயை மறித்து கட்டப்பட்டது தான் பேபி அணை. இதுவும் பென்னிகுக் கட்டியது தான். இதன் நீளம் 240 அடி. உயரம் 52 அடி. மெயின் அணைக்கும் பேபி அணைக்கும் இடைவெளி 275 மீட்டர். பேபி அணை மூலம் தான் மெயின் அணையில் அதிக தண்ணீர் தேங்க முடியும். எனவே இதனை உடைக்க குறி வைப்பதாக பொறியாளர்கள் கருதுகின்றனர். 

தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்பு

கேரளாவின் புதிய அணை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக பொறியாளர்கள், விவசாயிகள் கூறியது: முல்லை பெரியாறு அணைக்கு கீழ் பகுதியில் 300 மீட்டர் தூரத்தில் புதிய அணை கட்ட கேரளா இடம் தேர்வு செய்துள்ளது. பெரியாறு அணையில் 136 அடி வரை தேக்கினாலும், அணையிலிருந்து 104 அடிக்கு கீழ் தண்ணீரை வெளியேற்ற முடியாது. எனவே 32 அடி நீர் மட்டுமே தமிழகத்திற்கு கொண்டு வர முடிகிறது. பேபி அணையை உடைத்தால் பெரியாறு அணையில் 110 அடி தண்ணீர் தான் தேங்கும். எனவே தமிழகத்திற்கு வெறும் 6 அடி தண்ணீர் தான் கிடைக்கும். அணையில் நீர் மட்ட அளவு உயரும்போது தான் தேங்கும் பரப்பு அதிகரித்து கொள்ளளவு கூடும். இதில் 110 அடிக்கு கீழ் நீர் கொள்ளளவு குறைவாக தான் இருக்கும்.  பேபி அணையை உடைத்து, கால்வாய் தோண்டினால் தண்ணீர் புதிய அணை நோக்கி ஓடிவிடும். புதிய அணையின் அடிப்பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேற மதகு அமைக்கப்பட்டு விட்டால் தண்ணீர் முழுவதும் இடுக்கி அணைக்கு திருப்பி விடப்படும். பெரியாறு அணையின் உபரி நீரை தேக்க அமைக்கப்பட்ட வைகை அணை கதி என்ன ஆகும் என்பது அச்சத்திற்குரியது. மேலும் தமிழகத்தில் 2 லட்சம் ஏக்கர் நேரடி பாசனமும், ஒரு லட்சம் ஏக்கர் கிணற்று பாசனத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு தரிசாகும். இதுமட்டுமின்றி 65 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கும்.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?