-->

Pages

நம் தமிழ் இனத்தை நேசித்த மாவீரர்கள் - தயவு செய்து அவர்களை நிம்மதியாகத் தூங்கவிடுங்கள்....!

தலைமுறை தலைமுறையாக,சந்ததி சந்ததியாக,யுகம்யுகமாக மரணம் இந்தப்பூமிப்பந்தில் மனிதர்களை இடைவிடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது.பூமியின் வானத்தில் சாவுப்பறவைமட்டும் ஓயாமல் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.மரணத்தின் பின்னால்
சாதாரண மனிதர்களின் வாழ்க்கை அத்தியாயம் முடிவடைந்துவிடுகிறது.இலட்ச்சியத்திற்க்காக மரணித்தவர்களின் வரலாறுகள் மட்டும்தான் தலைமுறைகளைத்தாண்டி பூமிப்பந்தில் காலத்துடன் பயணம் செய்துகொண்டிருக்கிறது.அவர்களின் தியாகங்கள் பல தலைமுறைகளைத்தாண்டியும் சந்ததிகளின் இதயங்களில் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியபடியே இருக்கின்றன.ஒவ்வொருவருடைய மனதிற்க்குள்ளும் ஒரு சின்ன உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது.பொது உலகைத்தாண்டி சுயநலம் மிக்க அந்தச் சின்ன உலகமே ஒவ்வொரு மனிதனையும் வழிநடத்துகிறது.மாவீரர்கள் அந்தச் சின்ன உலகத்தை உடைத்தெறிந்துவிட்டு வெளியேறியவர்கள்.இழப்புக்கள்,மகிழ்ச்சிகள்,துயரங்கள்,உறவுகள்,சொத்துக்கள்,பணம்,பதவி என்று நீண்டு விழுதுகள் பரப்பிக்கிடக்கும் சுயநல உலகை உதறிவிட்டு இனத்திற்க்காக பொது உலகில் நின்று போராடியவர்கள்.தங்கள் சந்ததிகளின் சுதந்திர வாழ்வை நெஞ்சுகளில் சுமந்தபடி தலைமையின் பின்னால் அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞ்ஞர்களும்,யுவதிகளும்தான் இன்று மாவீரர்களாகி எங்கள் மனங்களில் மறக்கவியலாத மனிதர்களாகக் குடியிருப்பவர்கள்.மாவீரர்கள் சுதந்திரத்தை நோக்கிய பயணத்தில் எங்களை அழைத்துச்செல்ல தங்களை உருக்கி வழித்தடங்களை உருவாக்கிவிட்டு வரலாறாய்ப்போனவர்கள்.அவர்களுக்கு எதைச்செய்தும் தீர்க்கமுடியாத பெருங்கடனை எஞ்சியிருக்கும் நாங்கள் சுமக்கிறோம்.

***

வருடத்தில் ஒரே ஒருமுறை வரும் அந்தத் தன்னலமற்றவர்களின் நினைவுநாளைக்கூட கொண்டாட முடியாத இழிவான மனிதர்களாக இனத்தின் வரலாற்றில் நாங்கள் இருந்துவிடப்போகிறோமா..? என்ற கேள்வியே புலம்பெயர் தேசங்களில் அந்தப்புனிதர்களின் பெயரில் எம்மவர்களுக்கிடையே நடக்கும் அடிபிடிகள் நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.நடப்பவற்றைப் பார்க்கும்போது பூனைக்கு நாங்கள்தான் மணிகட்டினோம் என்பதை தமிழ் மக்களிடத்தில் காட்டவேண்டும் என்பதில்தான் அமைப்புக்கள் குறியாக இருக்கின்றனவேயன்றி மாவீரர் நினைவுகளை மானசீகமாகக் கொண்டாடப் புறப்பட்டிருப்பவர்களாகத் தெரியவில்லை.கொண்ட இலட்ச்சியத்திற்க்காக கோடிகளில் புரழும் வாழ்க்கையை உதறிவிட்டுக் காடுகளில் காலங்களைத் தொலைத்துவிட்டு தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் இனத்திற்க்காக அர்ப்பணித்த கடைசிவரையும் குடும்பத்தின் கடைசி வாரிசுவரை தன் ஒட்டுமொத்தக் குடும்பத்துடன் ஓடிப்போகாமல் தன் மக்களுடன் சமாந்தரமாகத் துயரங்களை தோழ்களில் சுமந்து பயணித்துக் கொண்டிருந்த ஒரு போராளித் தலைவனின் காலத்தில் வாழ்ந்தவரா நாங்கள் என்று வரலாறு எங்களைப் பார்த்துக் காறி உமிழ்கிறது.பதவி ஆசை,பொருளாசை,சொத்தாசை,தலைமைத்துவ ஆசை போன்ற பேராசைகளும் சாதி,மத,பிரதேச,ஊர் வெறிகளும் தமிழர்ககள் பலரின் மனங்களின் அடியில் காலங்காலமாக உறைந்துபோய்க் கிடந்து அவர்களை நான் என்ற சிறுவட்டத்திற்க்குள் குறுக்கி தங்கள் இனத்தையே கருவறுக்கும் கோடாலிக்காம்புகளாக
மாற்றிவிட்டிருக்கின்றன,மாற்றிவிடுகின்றன.வரலாறு நெடுக இதற்க்கான உதாரணங்கள் நெருஞ்சி முற்க்களாய்க் கொட்டிக்கிடக்கின்றன.பதவிகளில் இருக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் பலரது மனங்களில் பதுங்கிக் கிடந்த இந்த இழிகுணங்கள் இப்பொழுது விஸ்வரூபம் எடுத்து அவர்களில் பலரை நான் என்ற சிறு வட்டத்திற்க்குள் இழுத்துப் பிடித்து வைத்திருக்கின்றன.மாவீரர் நாள் என்பது எங்கள் ஒவ்வொருவருக்காகவும்,எங்கள் மண்ணுக்காகவும் மடிந்தவர்களை நினைவுகூருவது,அமைப்புக்களைப் பிரதிபலிப்பதல்ல என்பதில் தெளிவாக இருந்தால் எந்த அமைப்பு வந்தும் உங்களைக் குழப்பிவிடமுடியாது.யாருக்குப் பின்னாலும் நீங்கள் போகவேண்டிய அவசியமில்லை.உங்கள் வீடுகளிலோ,அலுவலகங்களிலோ,வேலை செய்யும் இடங்களிலோ,பொது இடங்களிலோ அவர்களை நினைவுகூருங்கள்.நெஞ்சுகளில் நன்றியுடன் அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.பொது நலத்திற்க்காக மடிந்தவர்களின் நினைவுகளைக் கொண்டாட யாருடைய சுயநலத்திற்க்கும் பலியாகிவிடாதீர்கள்.ஊரிலே உண்ணவழியின்றி உறவுகள் துடிக்கும்போது பேருக்குப் பெரிதாக மண்டபமெடுத்து அமைப்புகளாய்ப் பிரிந்து நின்று ஆடம்பரமாகச் செலவழித்து நாலு அரசியல்வாதியைக் கூப்பிட்டு உரையாற்றிவிட்டு நாலாவதுநாள் மறந்துபோய்விடுவதை விட நீங்கள் ஒவ்வொருவரும் தன்னெழுச்சியாக உண்மையான உணர்வுடன் அந்தப் புனிதர்களை நினைவுகொள்வதுடன் ஊரிலே உயிர்வாழப் போராடிக்கொண்டிருக்கும் இனத்திற்க்காகவும்,சந்ததிகளின் நிம்மதியான வாழ்விற்க்காகவும் ஏதாவது ஆக்கபூர்வமாக செய்வதிலேதான் மாவீரர் வாரமே பெருமை அடையும்.

***
நாங்கள் வாழ்வதை நேசித்த கோழைகள்,மாவீரர்கள் இனத்தை நேசித்த வீரர்கள்.சாவு அவர்களின் வாயிலில் வந்து வட்டமிட்டது.மரணம் எந்த நிமிடமும் அவர்களைக் கொத்திச்செல்லக் காத்திருக்கிறது என்று தெரிந்தும் போராடினார்கள்.வீழ்வோம் என்று தெரிந்தும் சந்ததி நிம்மதியாக வாழும் என்ற நம்பிக்கையுடன் போராடினார்கள்.எதை நேசித்தார்களோ அதற்க்காக எல்லாவற்றையும் கொடுத்துக் கடைசியில் தங்கள் உயிரையும் கொடுத்தார்கள்.அவர்கள் மடிந்தார்கள்.இலட்ச்சியத்திற்க்காக மடிந்தார்கள்.ஆயிரம் ஆயிரமாய் மடிந்தார்கள்.தோழர்களும் தோழிகளும் ஒன்றாக மடிந்தார்கள்.அவர்களின் இரத்தத்தில் நனைந்து சிவந்தது எங்கள் தேசம்.அந்தப்புனிதர்களின் கல்லறைகளின் நடுவே அடர்ந்துகிடக்கின்ற புற்க்களின் நடுவே பூத்திருக்கும் பூக்களின் அருகே உங்கள் உதடுகளைக்கொண்டு செல்லுங்கள்.அவற்றை முத்தமிடுங்கள்.அப்பொழுது அவர்களின் ஆன்மாவை முத்தமிடுவதாக நீங்கள் உணருவீர்கள்.அப்பொழுதும் அவர்கள் சந்ததியைப் பற்றியே பாடிக்கொண்டிருப்பார்கள்.பிழைப்புவாதிகளே தயவு செய்து அவர்களை நிம்மதியாகத் தூங்கவிடுங்கள்....! 
Ref:  http://www.yarl.com/forum3/index.php?showtopic=93303